உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியவுடன் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன் அதில் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். மேலும் சான் பிரான்சிஸ்கோவில் ட்விட்டர் தலைமையகத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டபோது எலான் மறுத்து விட்டதனால் தற்போது துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ட்விட்டர் தலைமையகம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. கழிவறைகள் அழுக்கு படிந்து காணப்படுவதாகவும், மீதமான உணவுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்படாததால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கழிவறைகளில் உள்ள பொருட்களை மாற்றுவதற்கு துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் ஊழியர்கள் சொந்தமாக டாய்லெட் பேப்பர்களை கொண்டு வந்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.