மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளிலும் ஓடைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், தர்வா தாலுகாவுக்குட்பட்ட தஹேலி பகுதியில் உள்ள குப்தி ஆற்றின் பாலத்தைக் கடக்க முயன்ற எர்டிகா கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக வெள்ளத்தின் சீற்றத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது.
காரை ஓட்டிச் சென்ற அவிநாஷ் கண்டாரே என்பவர் சாமர்த்தியமாக வெளியேறி அருகில் இருந்த மரக்கிளையைப் பிடித்து உயிர் தப்பிய நிலையில், காரில் இருந்த அவரது மனைவி மாதவி கண்டாரே மற்றும் இரு சிறுமிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.
அவிநாஷ் கண்டாரே தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, நள்ளிரவில் சொந்த ஊரான லோணி கிராமத்திற்கு எர்டிகா காரில் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் தஹேலி குப்தி ஆற்றின் பாலத்தில் வெள்ள நீர் மேலெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது.
நீரின் வேகம் மற்றும் ஆழத்தை சரியாகக் கணிக்க முடியாத நிலையில், காரை பாலத்தின் வழியே கடத்திவிடலாம் என அவர் நினைத்துள்ளார். ஆனால், பாலத்தைக் கடக்க முயன்ற கணத்திலேயே, சீறிப் பாய்ந்த வெள்ளப் பெருக்கு அந்த பெரிய காரை ஒரு பொம்மையைப் போல இழுத்துச் சென்றது.
கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும், அவிநாஷ் உடனடி சுதாரிப்புடன் காரில் இருந்து குதித்து, கரையில் இருந்த ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். ஆனால், காரின் உள்ளே இருந்த அவரது மனைவி மாதவியாலும், இரு சிறுமிகளாலும் வெளியே வர முடியாமல் காரோடு நீரினடியில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் சிக்கல் நீடித்த நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினரும், பேரிடர் மீட்புப் படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மாயமான மாதவி லோணி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் என்பதால், இச்சம்பவம் அப்பகுதி முழுவதிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
