திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெட்டாங்கிபுரம் மீனாட்சிபுரத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். சிவகுமார் தனக்கு சொந்தமான இடத்தில் நூல் பின்னும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். நேற்று சிவகுமார் வேலைக்கு சென்ற தன் மகன் சந்துருவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். ஆனால் சந்துரு அதை நம்பவில்லை.
உடனே ராஜேஸ்வரி தூக்கில் தொங்கியபடி இருந்த புகைப்படத்தை சிவக்குமார் தனது மகனுக்கு அனுப்பியுள்ளார். பதறி அடித்து சந்துரு வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிவகுமாரும் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவக்குமார் புதிய வீடு கட்டுவதற்காக கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். கடந்த ஒரு வாரமாக கடனை வசூலிப்பதற்காக வங்கி ஊழியர்கள் தொடர்ச்சியாக அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.