பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாரா என்ற தொலைதூரப் பகுதியில், தனது கணவரால் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான சில்வி யாஸ்மினா என்ற பிரெஞ்சுப் பெண் மற்றும் அவரது ஐந்து குழந்தைகள் பாகிஸ்தான் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்த நிலையில், 2014-இல் அவர்கள் பாகிஸ்தானிற்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு வந்ததில் இருந்தே யாஸ்மினாவையும் அவரது குழந்தைகளையும் வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல், ஒரு பாழடைந்த சிறிய அறைக்குள் அடைத்து வைத்து அவரது கணவர் அகமது கான் தொடர்ந்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான உண்மை, யாஸ்மினாவின் மகன்களில் ஒருவன் எப்படியோ அந்த வீட்டிலிருந்து தப்பித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறையினர் அந்த வீட்டை அதிரடியாக சோதனை செய்தபோது, யாஸ்மினா மற்றும் அவரது குழந்தைகளின் உடலில் பலத்த காயங்கள் மற்றும் தழும்புகள் இருந்ததை கண்டறிந்து அவர்களை மீட்டனர்.

மேலும், அங்குள்ள மூத்த குழந்தைகள் இருவர் தங்களது கல்வியை பாதியிலேயே இழந்ததும், பாகிஸ்தானில் பிறந்த மற்ற மூன்று இளைய குழந்தைகள் இதுவரை பள்ளி பக்கமே செல்லாததும் தெரியவந்துள்ளது. தங்களை தினசரி அடித்துத் துன்புறுத்தியதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளதை அடுத்து, அவரது கணவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

தற்போது மீட்கப்பட்ட பிரெஞ்சுப் பெண் மற்றும் அவரது குழந்தைகள் பெஷாவரில் உள்ள ஒரு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு திரும்புவதற்காக பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.