உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்துள்ள ஒரு கொடூரச் சம்பவம், குடும்ப உறவுகளின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. பெற்ற தாயை இழந்த 16 வயது சிறுமியை, அவளது சொந்தத் தாத்தாவே கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹத்ராஸ் மாவட்டம் சிக்கந்தராராவு பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் தாயார் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவள் தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டிலிருந்து ஊருக்குத் திரும்பிய சிறுமியை, கடந்த ஜூன் 20-ம் தேதி அவளது 70 வயது தாத்தா மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பிறகும் தன் பாலியல் வெறி அடங்காத அந்த நடன், சிறுமியின் தந்தை வேலைக்காக வெளியில் செல்லும் நேரங்களில் எல்லாம், அவள் வீட்டில் தனியாக இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்தித் தொடர்ந்து அவளுக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று திடீரெனச் சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோதுதான் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளியானது. மருத்துவப் பரிசோதனையில் அந்தச் சிறுமி இரண்டரை மாத கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதைக் கேட்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர், உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போக்சோ சட்டம் மற்றும் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அந்த 70 வயது முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாட்சியான அவரது தாத்தாவை போலீசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
