இப்போது எனக்கு முடி அதிகமாக உள்ளது என அக்தரை கலாய்த்தார் முன்னாள் இந்திய வீரர் சேவாக்..

முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ஆகியோர் தத்தம் அணிக்காக ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடினர். சேவாக் மற்றும் அக்தர் இருவரும் களத்தில் கடுமையாக மோதிக்கொண்டாலும், களத்திற்கு வெளியே பரஸ்பர நட்பைக் கொண்டிருந்தனர்.

இருவரும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட் குறித்த கருத்துக்களை தொடர்ந்து கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இருவரும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் முரண்பட்ட கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். சமூக வலைதளங்களுக்கு தீனி போட ஒருவரையொருவர் கிண்டல் செய்வார்கள்.

இந்நிலையில் சமீபத்தில், ‘பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’  என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரேந்திர சேவாக்கிடம், அக்தரை பலமுறை கேலி செய்துள்ளீர்கள். இந்த செயலுக்கு பின்னால் ஏதாவது நட்பு இருந்ததா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சேவாக், “எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே கேலியும் நட்பும் இருக்கும். 2003-04 முதல் அக்தருடன் எனக்கு ஆழ்ந்த நட்பு உண்டு. நாங்கள் இரண்டு முறை பாகிஸ்தானுக்கும், அவர்கள் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

நட்பின் காரணமாகவே நாம் ஒருவரையொருவர் கிண்டல் செய்து கொள்கிறோம். அவர்தான் முதலில் ஆரம்பித்தார். “சேவாக்கின் தலையில் இருக்கும் முடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது,” என்று அவர் கூறினார்.
இப்போது நான் சொல்கிறேன், இப்போது எனக்கு முடி அதிகமாக உள்ளது,உங்கள் குறிப்புகளை (பணம்) விட எனக்கு முடி அதிகம்.” என்றார் ஜாலியாக..