உத்திரபிரதேச மாநிலத்தில் பள்ளி ஆசிரியையும், 16 வயது சிறுவனும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது டேராடூனை சேர்ந்த 25 வயது உடைய இளம்பெண் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவரும் மீரட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவனும் சோசியல் மீடியா மூலம் பழகி காதலை வளர்த்தனர். ஆசிரியை சிறுவனுக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுவனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறுவனுக்கு போலியான ஆவணம் தயாரித்து ஆசிரியை திருமணம் செய்து அதனை பதிவு செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்துமாறு ஏடிஜி துருவ காந்த் தாக்கூர் உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியை டேராடூனில் இருக்கும் ஒரு பள்ளியில் வேலை பார்த்துள்ளார். அப்போது சிறுவனுக்கும் ஆசிரியருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பேசி பின்னர் காதலை வளர்த்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆசிரியை மீரட்டுக்கு காரில் வந்து சிறுவனை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகு காஜியாபாத்தில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த சிறுவனின் குடும்பத்தினர் திருமண பதிவை ரத்து செய்ய முயன்றனர். ஆனால் ஆவணங்கள் இல்லாததால் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. சிறுவனின் கல்வி சான்றிதழை பள்ளி நிர்வாகம் தர மறுத்ததால் பிரச்சனை அதிகரித்தது. தற்போது ஆசிரியையையும் சிறுவனையும் தேடும் பணியில் போலீஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பிடிபட்டால் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.