துருக்கியில் சிசேரியன் எனப்படும் மகப்பேறு அறுவை சிகிச்சை பிரசவங்களை மேற்கொண்டதற்காக 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு பெண் நோயியல் வல்லுநர்கள் மீது அந்நாட்டு சுகாதார அமைச்சகம் மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் நாடுகளிலேயே துருக்கியில் தான் சிசேரியன் பிரசவங்களின் விகிதம் மிக அதிகமாக உள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவர்கள் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் அனைவரும் மகப்பேறுக்கு முந்தைய மருத்துவக் கட்டாயப் பயிற்சிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
துருக்கியில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டும், இயற்கையான பிரசவங்களை ஊக்குவிக்கும் பொருட்டும் அதிபர் ரையிப் எர்டோகன் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு “குடும்பத்தின் தசாப்தம் ” என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, மருத்துவக் காரணங்கள் ஏதுமின்றி தனியார் மருத்துவமனைகளில் விருப்பத்தின் பேரில் செய்யப்படும் சிசேரியன் பிரசவங்களுக்கு அந்நாட்டு அரசு தடையும் விதித்திருந்தது.
இந்த உத்தரவை மீறி, தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான அறுவை சிகிச்சை பிரசவங்களை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது தற்போது ஒழுங்கு விசாரணை நடத்தப்பட்டு, எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இஸ்தான்புல் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் சிசேரியன் செய்த மருத்துவர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீண்டும் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய பிறகே மருத்துவப் பணிக்குத் திரும்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
