மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள ஹிரா நகர் காவல் நிலையத்தின் செயல்பாடு தற்போது கடுமையான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. கார் உடைப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தங்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி கைகளில் கட்டியிருந்த பிளாஸ்டர் மற்றும் கட்டுகளைத் தாங்களே கழட்டி எறியும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காவல்துறை மீது பல்வேறு ஊழல் புகார்களும், குற்றவாளிகள் நாடகமாடியுள்ளதும் இந்த வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது.
முன்னதாக, கார் உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கேற்ப வெளியான முந்தைய வீடியோக்களில் காவல்துறையினரின் உதவியுடன் தள்ளாடியபடியும், கைகளில் கட்டுப்போட்டபடியும் நடந்து சென்றனர். ஆனால், தற்போது சிறைக்கு வெளியே எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புதிய வீடியோவில், அவர்கள் எந்தவிதமான உதவியும் இன்றி, முற்றிலும் இயல்பான முறையில் நடந்து செல்வதுடன், தங்களது கைகளில் இருந்த பிளாஸ்டர் மற்றும் கட்டுகளைத் தாங்களே உரித்து எறிவது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, காவல்துறையினர் கூறிய மருத்துவக் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், இது திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் எதிரிகளிடம் இருந்து 20,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்துக் காவல்துறை தரப்பிலிருந்து இதுவரை முறையான அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதும் அளிக்கப்படவில்லை.
சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டுள்ளனர். இந்தூர் கூடுதல் டிசிபி ராஜேஷ் தண்டோதியா கூறுகையில், வைரலாகி வரும் வீடியோ மற்றும் அதன் உண்மைகள் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விசாரணையின் முடிவில் தவறு இழைத்தவர்கள் மீது தகுந்த மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
