பாகிஸ்தானில் கடந்த வருடம் பெய்த கன மழையால் கோடிக்கணக்கிலான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தது சுமார் 80 சதவீதம் வரை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசு வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையை ஈடு செய்து வந்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து வந்த போதிலும் அங்கு உணவு தானியங்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் அரசு சார்பாக மானிய விலையில் உணவு தானிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் அங்கு ஏராளமான மக்கள் முண்டியடித்து கொண்டு வாங்கும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் கோதுமை மூட்டைகளைக் கொண்டு  செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கான மக்கள் துரத்தி செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதாவது உணவுப்பொருட்கள், காய்கறி, மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலை தாறுமாறாக ஏறி உள்ளது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.3,100 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ சர்க்கரை ரூ.155, ஒரு கிலோ வெங்காயம் ரூ.280-க்கும், அதேபோல் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.700 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.