நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி பகுதியில் புதூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். லாரி தொழில் செய்து வரும் இவர் பிரபல சிக்கன் நிறுவனம் பெயரில் கடை நடத்த உரிமம் கேட்டு ஆன்லைனில் சில விவரங்களை தேடி உள்ளார். இதனை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் நாங்கள் உரிமம் வாங்கி தருகிறோம் எனக் கூறி ராஜேஷிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இந்நிலையில் முதற்கட்டமாக ராஜேஷிடம் ரூ.1 1/2 லட்சம் வங்கி கணக்கு மூலம் அவர்கள் வாங்கியுள்ளனர். அதன்பின் உங்களுக்கு ஆர்டர் கிடைத்துவிட்டது எனக் கூறி மேலும் 7 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.
இதனையடுத்து ரூ.8 1/2 லட்சம் மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பிய ராஜேஷ் தனக்கு உரிமம் வரவில்லையே என நினைத்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே மீண்டும் அந்த மர்ம நபர்கள் உரிமத்தின் நகலை பெறுவதற்கு மேலும் 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை அறிந்து கொண்டார். இது குறித்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.