உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளத கேதார்நாத் கோயிலின் புனிதமான வளாகத்தில், சில இளைஞர்கள் டிஜே இசையுடன் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோ கோயில் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த வீடியோவில் காணப்படும் நிகழ்வு பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, ருத்ரபிரயாக் காவல்துறையினர் அடையாளம் தெரியாத அந்த நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோ தொடர்பாக பத்ரி-கேதார் கோயில் குழு அளித்த புகாரின் அடிப்படையில்,  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், சமூக ஊடக கண்காணிப்பு மூலமாக சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். கேதார்நாத் கோயிலின் புனிதத்தன்மையை கெடுக்கும் வகையில் நடந்துவரும் செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இத்தகைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுவதால், சமூகத்தில் மத விரோதப் பதட்டங்களை உருவாக்கும் அபாயம் இருப்பதாக காவல்துறையினர்  எச்சரித்துள்ளனர். மேலும் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் புனித தலங்களில் முறையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான எதையும் கண்டால் உடனடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது வீடியோவில் இருப்பவர்கள் யார் என்பதையும், வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பதையும் உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.