பீகாரின் நாக்ரி ஹால்ட் அருகே ரயிலில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு இளைஞர்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் (RPF) கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது.

அந்த வீடியோவில், ரயில்வே பாதையின் அருகே இரண்டு இளைஞர்கள் கம்புகளுடன் நிற்கும் காட்சி காணப்படுகிறது. ரயில் நெருங்கும் போது, அதில் கதவுகளின் அருகில் நின்ற பயணிகளை அவர்கள் தாக்கும் பரிதாபமான காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்த வீடியோவை வைத்து விசாரணை தொடங்கிய RPF, சம்பவம் நடந்த இடத்தை அடையாளம் காண்பதுடன், குறித்த இளைஞர்களை சில மணி நேரங்களில் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள், இந்த செயலை சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நோக்கத்துடன் செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். தாக்கப்பட்ட பயணிகளில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வீடியோவில் தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது,” என RPF தங்களது X பக்கத்தில் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களுக்காக இப்படியொரு ஆபத்தான செயலை மேற்கொண்ட இளைஞர்களின் நடவடிக்கை, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.