கேரள மாநிலம் இடுக்கி தொடுபுழாவில் அமைந்துள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 1996 -ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் அனைவரும் தாங்கள் படிக்கும் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர்.
அவர்களுள் கண்ணூரை சேர்ந்த பிரதீப் ஜோய் என்பவர் மேடைக்கு சென்ற போது கையில் ஒரு பார்சலுடன் சென்றுள்ளார். அப்போது அனைவரும் பிரதீப் நமக்கு ஏதோ வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கப் போகிறார் என எண்ணினர். ஆனால் அவர் மேடையில் வைத்து அந்த பார்சலை திறந்த போது அனைவரும் ஆச்சரியபட்டனர்.
ஏனெனில் அந்த பார்சலில் அவர் படிக்கும் காலத்தில் கல்லூரி தொடங்கும் போதும், முடியும் போதும் அடிக்கும் உலோகத்திலான ஒலி யெழுப்பும் மணி அதில் இருந்தது. இந்த மணியை பிரதீப் படிக்கும்போது திருடியதாகவும், அதனை இதுநாள் வரை பத்திரமாக வைத்திருந்ததாகவும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பிரதீப் அந்த மணியை ஏன் திருடினேன் என விளக்கம் அளித்த போதும் அரங்கம் முழுவதும் சிரிப்பை ஏற்படுத்தியது. “நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது ஒரு நாள் கல்லூரிக்கு தாமதமாக வந்தேன். அப்போது கல்லூரியின் முதல்வராக இருந்தவர் என்னை முட்டி போட சொல்லி எனக்கு தண்டனை கொடுத்தார்.
அப்போது அது எனக்கு அவமானமாக இருந்தது. எனவே கல்லூரியில் ஒலி எழப்பும் மணியை அடித்தால் தானே தாமதமாக வந்தது தெரியும் என எண்ணி அந்த மணியை திருடி விட்டேன் என கூறினார். இதுகுறித்து என் நண்பர்களிடம் சந்தோசமாக பகிர்ந்து கொண்டேன். ஆனால் அதற்க்கு பின்பு தான் மணியை திருடியது தவறு என உணர்ந்து இதுவரை வீட்டில் பத்திரமாக வைத்திருந்தேன்.
தற்போது நான் செய்த தவறை எவ்வாறு சரி செய்வது என எண்ணிய போது 28 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்ற செய்தி கேட்டேன். அதனாலே இந்த சந்திப்புக்கு வரும்போது அந்த மணியை பத்திரமாக எடுத்து வந்து இப்போது கல்லூரி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கிறேன் என கூறினார்.
இதனை கேட்டு அங்கிருந்த கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் முன்னால் மாணவர்களும் அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.
