கர்நாடக மாநிலம் சித்ததுர்கா மாவட்டம் டும்மி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் (வயது 23) என்ற இளைஞர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 23ஆம் தேதி ஊருக்கு காரில் வந்தபோது ஒரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காயமடைந்த மல்லிகார்ஜுனை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்காக மேல் மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவரது சகோதரி நிஷா மற்றும் மாமன் மஞ்சுநாத் இருவரும் சேர்ந்து அவரை ஆம்புலன்ஸில் பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், சிகிச்சை பெறும் வழியிலேயே மல்லிகார்ஜுன் இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை வீடு திரும்பக் கொண்டு வந்தனர். இறுதி சடங்கு நடத்தும் தருணத்தில் அவரது கழுத்தில் நெறிக்கப்பட்ட காயம் பெற்றோரின் கவனத்திற்கு வந்ததையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. முதலில் விபத்து என்று கூறப்பட்டிருந்தாலும், மருத்துவமனையில் அவருக்கு HIV தொற்று இருப்பது தெரிய வந்ததும், குடும்பத்தின் ‘மரியாதை’ பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில், நிஷா மற்றும் மஞ்சுநாத் இருவரும் ஆம்புலன்ஸில் தலையணையால் மூடியும், கழுத்தை நெறித்தும் மல்லிகார்ஜுனை திட்டமிட்டவாறு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து மல்லிகார்ஜுனின் பெற்றோர் கண்ணீருடன் கூறியது, “சொத்துக்காகவே என் மகனை கொலை செய்துள்ளனர். HIV பற்றி நாடகம் நடத்துகிறார்கள்” என கூறி வலுக்கட்டாயம் செய்துள்ளனர். ஒரே குடும்பத்தில் இப்படியான கொடூர சம்பவம் நடப்பது சமூகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
