உத்தரப்பிரதேச மாநிலதில் உள்ள  மீரட்டில் திருமண விழா ஒன்றில் சமையல் கூடத்தில் நடந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.  அதில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் சோயிப் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது மீரட்டில் ஜானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு திருமண விழாவில் சமையல் நடைபெறுவதற்கான விடியோ ஒன்று இணையத்தில் பரவியது. அதில், ஒருவர் ரொட்டியைத் தயாரிக்கும் போதே அதில் எச்சில் துப்புவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ பலரும் பகிர்ந்ததும், இது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

வீடியோவை ஆய்வு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபரை குராலி பகுதியைச் சேர்ந்த சோயிப் என அடையாளம் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து அவரைப் பிடிக்க போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையும், தேடலையும் நடத்தினர்.

பல நாள் முயற்சிக்குப் பிறகு, திங்கட்கிழமை சோயிப் ஜானி கால்வாய் பாலம் அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் சிவகுமார் சர்மா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சோயிபை கைது செய்தனர்.

சோயிப் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டு வருகிறார்கள். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை உணர்ந்து, மக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் பற்றி உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்குமாறு நிர்வாகமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.