புதுச்சேரியில் கூல் லிப் என்ற பெயரில் புதிய போதை பொருள் விற்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் எளிதாக கிடைப்பதாக தெரிவித்தார். தற்போது புதிய ஒரு போதை பொருள் விற்பனை செய்யப்படுகின்றது என்று கூறிய நாராயணசாமி அந்த பாக்கெட்-ஐ செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.

கூல் லிப் எனப்படும் இந்த பாக்கெட்டில் 6 மாத்திரைகள் உள்ளது எனவும் இதனை சாப்பிட்டால் நாள் முழுவதும் போதையில் இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது எனவும் தெரிவித்தார். இளைஞர்களை சீரழிக்கும் இந்த போதை பொருளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். பேருந்து நிலைய பகுதியில் இந்த பொருள் கிடைப்பதாக தகவல் வந்துள்ளது எனக் கூறிய நாராயணசாமி நாடு முழுவதும் போதை பொருளை ஒழிப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார். ஆனால் புதுச்சேரியில் அனைத்து போதை பொருட்களும் தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டினார்.