கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாளியூர் பகுதியில் மரம் ஏறும் தொழிலாளியான பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பூபதி நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த ஓடுகளை பிரித்து எறிந்து பூபதி ரகளை செய்துள்ளார். இதனை அந்த பகுதி மக்கள் கண்டித்து பூபதியை அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு பூபதி அட்டகாசம் செய்ததால் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பூபதியை கண்டித்தனர். இதனால் அவர் வீட்டிற்குள் சென்று விட்டார்.

சில நிமிடங்கள் கழித்து வீட்டில் இருந்து வெளியே வந்த பூபதி அங்கிருந்த மின்கம்பத்தில் வேகமாக ஏறினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. பின்னர் மின் கம்பத்திலிருந்து கீழே இறங்க மாட்டேன் என அடம்பிடித்த பூபதியிடம் போலீசார் நைசாக பேச்சு கொடுத்து கீழே இறங்கி வர செய்தனர். அதற்குள் விடியகாலை 5 மணி ஆனது. பின்னர் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண்டித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் விடிய விடிய தூங்காமல் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.