கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை பகுதியில் இருக்கும் மரக்கடையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அமித் குமார் காட்டிநாயக்கனப்பள்ளி முருகன் கோவிலுக்கு சென்று கோவில் பின்புறம் இருக்கும் 80 அடி உயர மலை மீது ஏறினார். இதனையடுத்து மலை உச்சியில் இருக்கும் 30 அடி உயர பாறையில் ஏறி செல்பி எடுக்க முயன்றபோது அமித் குமார் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரது செல்போனும் உடைந்தது. நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் நண்பர்கள் அங்கு சென்று தேடிப் பார்த்தனர்.

அப்போது அமித் குமார் பாறையில் இருந்து விழுந்து செங்குத்தான மலை இடுக்கில் சிக்கி கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அமித் குமாரை உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.