
திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு தொகை அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.
அதே போன்று திருவள்ளூர் அடுத்துள்ள போலிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் வேல்யூ ஸ்பேஸ் கம்பெனி என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியது. அதற்காக சுமார் 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த பணத்தை பலமுறை நில எடுப்பு தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனிடம் கேட்டபோதும் அவர் காலதாமதம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சுமார் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் இழப்பீடு தொகை கொடுப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்நிறுவனத்தின் உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்களின் வழிகாட்டுதலின் படி, முதல் கட்டமாக ரூ. 75 ஆயிரம் தனி வட்டாட்சியர் அதிகாரிக்கு வேல்யூ பேஸ் கம்பெனி நிறுவன ஊழியர் கொடுத்த போது மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவருக்கு கொடுக்கப்பட்ட 75 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.