
உலகம் முழுவதும், பெண்களின் நீளமான கூந்தல் அவர்கள் அழகையும் பெண்மையையும் பிரதிபலிக்கிறது என கருதப்பட்டு வருகிறது. அதிலும், முன்னொரு காலங்களில், ராணிகளும் செல்வந்தர்களும் தனிப்பட்ட முறையில் கூந்தலை பராமரிக்க நிபுணர்களை வைத்து, நீளமாக வளர ஊட்டச்சத்து கலவைகளை பயன்படுத்தியதற்கான பதிவுகள் உள்ளன. ஆனால், தற்போதைய வேகமான வாழ்க்கையில், கூந்தல் பராமரிக்க நேரமின்றி, பலரும் தயாராக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், சீனாவின் குவாங்ஸி ழுவாங் மாகாணத்தில் உள்ள ஹுயாங்லூவோ கிராமத்தில் உள்ள ரெட் யாவோ பெண்கள் கூந்தலை பெண்மையுடன் ஆழமாக இணைத்துள்ளனர்.
அதாவது ரெட் யாவோ பெண்கள் உலகளவில், ஆறு முதல் ஏழு அடிவரை நீளமான கூந்தல் வைத்திருப்பதற்காக “உண்மையான ராபன்சல்கள்” என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறையே பொதுவாக 18-வது பிறந்தநாள் அன்று—முடியை வெட்டிக் கொள்ளும் பழக்கவழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அந்த முதல் முடி வெட்டுதல், அவர்கள் திருமணத்திற்கு தயார் என ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீண்ட கூந்தலை வளர்ப்பது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நலனையும் நீண்ட ஆயுளையும் கொண்டு வருமென்று அவர்கள் நம்புகின்றனர். இந்த ரெட் யாவோ பெண்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும் கருமையாகவும் பராமரிக்க, பாரம்பரியமான முறையில் ஒரு சிறப்பு சுத்திகரிப்பு முறையை பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் பயன்படுத்தும் “ஷாம்பு” முழுவதுமாக இயற்கை பொருட்களிலேயே தயாரிக்கப்படுகிறது, அதில் முக்கியமான பொருள் புளிக்கவைத்த அரிசி நீர். அவர்கள் அரிசி நீரை புளிக்க விட்டு, அதில் மூலிகைகள், பம்பளி பழத்தோல்கள், மற்றும் தேயிலை சிரோமங்கள் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு சிறப்பு திரவம் உருவாக்குகிறார்கள். பின்னர், அந்த கலவையை மரத்தால் செய்யப்பட்ட பாரம்பரிய சீப்பு மூலம் கூந்தலில் சமமாகப் பரப்புகிறார்கள். இந்த முறையின் மூலம், அவர்கள் கூந்தலை இயற்கையான முறையில் நீண்ட காலம் பாதுகாத்து வருகிறார்கள்.