2011 ஒருநாள் உலக கோப்பையை இந்தியா வென்று  13 ஆண்டுகள் ஆகிறது.

இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஏப்ரல் 2 அன்று ஒரு நாள் உலக கோப்பையை வென்றது. இந்த பரபரப்பான உலக கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஜெயவர்த்தனே 103 ரன்களும், சங்ககரா 48 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் கௌதம் கம்பீர் 97 ரன்களும், கேப்டன் எம் எஸ் தோனி 91 ரன்களும், விராட் கோலி 35 ரன்கள், யுவராஜ் சிங் 21 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். மேலும் அனைத்து இந்திய வீரர்களுமே உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டனர்.

இந்நிலையில் இன்றோடு 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2024 ஏப்ரல் 2ஆம் தேதியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தோனியின் 91 ரன் இன்னிங்ஸ் வைரலாகி வருகிறது. இந்தியாவின் 15 பேர் கொண்ட 2011 ஒரு நாள் உலகக் கோப்பை அணியில் 4 வீரர்கள் இன்னும் சுறுசுறுப்பாக கிரிக்கெட் வீரராக உள்ளனர். அதில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி இன்னும் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதேபோல விராட் கோலி ஆர்சிபி அணிக்காக ஐபிஎல்லில் விளையாடி வருவதோடு, சர்வதேச கிரிக்கெட்டிலும் தீவிரமாக ஆடி வருகிறார்.

மேலும் மற்ற இரண்டு சுறுசுறுப்பான வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பியூஷ் சாவ்லா ஆவர். ஐபிஎல்லில் அஸ்வின் ராஜஸ்தான் அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் ஆடி வருகிறார். பியூஸ் சாவ்லா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.