இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல. பலரும் கீழே விழுந்து காயமடைந்த பிறகே ஓட்டக் கற்றுக்கொள்கிறார்கள். அப்படியானதொரு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது, இது பலரையும் சிரிப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக் கொள்கிறார். வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு, மெதுவாக முன்னோக்கி நகர்கிறார். அவருக்குப் பின்னால் ஒரு இளைஞர் எப்படி ஓட்ட வேண்டும் என்று விளக்கி வழிநடத்துகிறார்.

ஆனால், பெண்ணின் கவனம் எங்கோ இருக்க, அவர் அக்ஸிலேட்டரை அதிகமாக திருகியவுடன், ஸ்கூட்டர் அசுர வேகத்தில் முன்னோக்கிப் பாய்கிறது. வண்டியைச் சமநிலைப்படுத்த முடியாமல் திணறும் அந்தப் பெண்ணின் வேகத்தைப் பார்த்த இளைஞர், அவரைக் கவனிக்க முடியாமல் பின்தங்கி விடுகிறார். விபத்தின் தீவிரம் என்ன என்பது வீடியோவில் காட்டப்படாவிட்டாலும், ஸ்கூட்டரின் வேகம் மற்றும் சமநிலை இழந்ததால், அவருக்கு கடுமையான விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

இந்த வேடிக்கையான வீடியோவை @iamtobitheboss_ என்ற எக்ஸ் (X) கணக்கு, “ஏன் அவரை வண்டி ஓட்ட அனுமதித்தார்கள்? அவர் நலமாக இருக்கிறார் என்று நம்புகிறேன்” என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளது. 12 விநாடிகள் ஓடும் இந்தக் காணொளி, 3 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளையும், பல நூற்றுக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது.

இந்தப் பதிவைக் கண்ட ஒரு பயனர், “அதனால்தான், வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் போது முதலில் பிரேக்கைப் புரிந்து கொள்ளுங்கள், அக்ஸிலேட்டரை பிறகு பார்க்கலாம் என்று சொல்வார்கள்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார். மற்றொருவர் கேலியாக, “அது ஸ்கூட்டர் இல்லை, ஏவப்பட்ட ஏவுகணை” என்று பதிவிட்டுள்ளார். அதே சமயம், பல பயனாளர்கள் இந்தக் காணொளியை ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கின்றனர். புதிதாக இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.