சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை எம்.சி.எம் கார்டனில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக இருக்கிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ வர்ஷா என்ற மகனும், 17 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 14-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக ஸ்ரீ வர்ஷா உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயஸ்ரீ கடந்த 19-ஆம் தேதி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து தனது மனைவி எழுதிய கடிதத்தை சதீஷ் பார்த்தார். அதில் எனது மகன் ஸ்ரீ வர்ஷாவை பிரிந்து என்னால் வாழ முடியவில்லை. அவன் போன இடத்திற்கு இருக்கேன் நானும் போகிறேன். மகள் அழ வேண்டாம். நீ தான் தந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என உருக்கமாக எழுதியுள்ளார். இதற்கிடையே ஜெயஸ்ரீ செல்போன் மூலம் தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு தான் கங்கை நதிக்கு சென்று ஜல சமாதி அடையப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர் சதீஷ்க்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக சதீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஜெயஸ்ரீ தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள தியாகராய கல்லூரி மெட்ரோ ரயிலில் ஏறி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றது தெரியவந்தது. அங்கிருந்து கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சென்றுள்ளார்.

இதனால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் டிக்கெட் பரிசோதகர் உதவியுடன் ரயில் நாக்பூரில் சென்று கொண்டிருந்தபோது ஜெயஸ்ரீயை பத்திரமாக மீட்டனர். அவரிடம் விசாரித்த போது இறைவன் நம்பிக்கையின் படி தற்கொலை செய்து கொண்டால் அடுத்த பிறவி கொடியதாக இருக்கும். எனவே கங்கை புனித நதியில் அடைந்து வாழ்வை முடித்து க்கொள்ள சென்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சதீஷ் தனது மனைவியை அழைத்து வர சென்றுள்ளார்.