கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊடேதுர்கம் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் நாகமங்கலம் கிராமத்திற்குள் நுழைந்து நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்குள் நுழைந்து 4 ஏக்கர் பரப்பளவிலான நெல், தென்னை மரங்கள், 1 1/2 ஏக்கர் பரப்பளவிலான பீன்ஸ் பயிர்கள் ஆகியவற்றை சேதப்படுத்திவிட்டு சென்றது.

அதில் 20 யானைகள் நாகமங்கலம் கிராமத்தில் இருக்கும் விவசாய நிலங்களில் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் விவசாய நிலங்களுக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது எனவும், வெளியே வரும்போது கவனமாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.