கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் மணலி விளைப்பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சொந்தமாக ஏராளமான மினி பேருந்துகளை இயக்கி வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமார் தொழில் விஷயமாக படந்தாலுமூடு பகுதியில் இருக்கும் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து மினி பேருந்து தொழிலில் போதிய லாபம் இல்லாததால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விஜயகுமார் சிரமப்பட்டு ஒவ்வொரு மினி பேருந்தாக விற்று கடனை அடைத்து வந்துள்ளார்.

இறுதியாக அவரிடம் ஒரு மினி பேருந்து மட்டும் இருந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் வாங்கிய கடனை மட்டும் அடைக்க வேண்டி இருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு விஜயகுமார் அந்த ஒரு மினி பேருந்தையும் புதுக்கடை பகுதியில் இருக்கும் ஒருவருக்கு விற்பனை செய்து நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 5 லட்ச ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும் என உடன்பாடு செய்துள்ளார். ஆனால் அந்த நபர் நிதி நிறுவனத்திற்கு பணத்தை செலுத்தாததால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளரும், ஊழியர்களும் கந்து வட்டியுடன் சேர்த்து 8 லட்ச ரூபாய் தர வேண்டும் என விஜயகுமாருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் மன உளைச்சலில் விஜயகுமார் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விஜயகுமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் மினி பேருந்து அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.