வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கடந்த 8-ம் தேதி கோவையில் ரோட் ஷோ நடத்திய பின்பு வடவள்ளியில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக கூட்டணி கட்சிகள் ஏதும் எதிர்த்து பேசுவதில்லை அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். திமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அதிமுக பாஜக இணக்கமாக இல்லை என்று கூறுகிறார்.

நீங்கள் கண்டுபிடித்தீர்களா? டாக்டர் பட்டம் கொடுத்து விடலாம், ஏன் நோபல் பரிசு கொடுக்கலாம்?. எங்களுக்கும் எங்களுடைய கூட்டணி கட்சிக்கும் இணக்கம் இல்லை என சொல்வதற்கு நீங்கள் யார்? நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் உங்களுக்குள் தான் கருத்து வேறுபாடு இருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் எங்களுடைய கொள்கை என்கிறார் திருமாவளவன்.

அப்படி என்றால் உள்ளுக்குள் ஒன்றை வைத்துவிட்டு வெளியே ஒன்றைதான பேசுறீங்க. எப்படியாவது கூட்டணி ஆட்சி வரக்கூடாது என்று உள் மனது சொல்கிறது. ஆனால் வெளியே இல்ல கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்ல என அவரை சொல்கிறார். 2 கருத்தையும் அவர்தான் சொல்கிறார். உங்களுடைய கூட்டணியில்தான் மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது என்று தெரிவித்தார்.