ஐபிஎல் 2025 தொடரில் பல இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணியில் அறிமுகமாகிய வைபவ் சூர்யவன்ஷி தனது 14 வயதில் அசாதாரண திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தவர். இவர் ஆடிய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஆரம்பித்தார். இதனை அடுத்து குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.

மேலும் குறைந்த வயதில் ஆட்ட நாயகன் விருது என ஏராளமான சாதனைகள், பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில் வைபவ் சூரியவன்ஷி அறிமுகமான முதல் போட்டியில் ஆட்டம் இழந்து சென்ற வீடியோவில் அவர் மிகவும் அழுததாக பலரும் தெரிவித்துள்ளனர். இது குறித்து சூர்யவன்ஷி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “நான் எப்போது அழுதேன்? மைதானத்தில் இருந்த மின்விளக்குகள் மற்றும் எல்இடி திரைகள் மூலம் வெளிவந்த பிரகாசமான வெளிச்சம் என் கண்களை சிமிட்ட வைத்தது. அதனால் கண்களை துடைத்துக்கொண்டே வெளியேறினேன். ஆனால் நான் அழவில்லை மக்கள் நான் அழுதுவிட்டேன் என நினைக்கிறார்கள்”என விளக்கம் அளித்துள்ளார்.