ஆந்திர மாநிலத்தில் உள்ள பழைய குண்டூரில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வருபவர் மணி குமார் (40). இவர் அப்பகுதியில் புடவைகளுக்கு சாயமிடும் தொழில் செய்து வந்தார். கொரோனாவுக்குப் பின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிக கடன் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அதனால் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு நண்பருடன் இணைந்து கள்ள நோட்டு அச்சடிக்க திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக தனது நண்பரான மது (27) என்பவர் உடன் சேர்ந்து கள்ள நோட்டு அச்சடிக்க தொடங்கியுள்ளார். இதற்காக கடந்த 1ஆம் தேதி அதே பகுதியில் வாடகை வீடு ஒன்று எடுத்து கலர் பிரிண்டர், லேமினேஷன் இயந்திரம் மற்றும் பிற உபகரணங்கள் வாங்கியுள்ளார்.

யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தேசிய உடமை ஆக்கப்பட்ட வங்கியின் சீல் மற்றும் நாடாக்களை போலியாக அச்சிட்டு பயன்படுத்தியுள்ளார். இந்த கள்ள நோட்டுகளை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாலந்தம் என்ற கிராமத்தில் விநியோகித்துள்ளனர். இதில் முதலாவதாக ரூபாய் 1 லட்சம் அசல் நோட்டுக்கு, ரூபாய் 3 லட்சம் கள்ள நோட்டு கொடுத்துள்ளனர். இதனால் கிராமம் முழுவதும் கள்ள நோட்டு புழக்கத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து பிக்கபோலு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தனிப்படை காவல்துறையினர் மணிக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இவருடன் இவரது நண்பரான மது (27), ஹரிபாபு(34), சீனிவாஸ்(35), ஏடு கொண்டலூ(40) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ரூபாய் 1.6 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் ரூபாய் 9680 ரொக்கம், கார், 5 செல்போன்கள், கலர் பிரிண்டர்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு youtube இல் சில வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகள் தயாரித்து விற்பனை செய்தோம். நகரப் பகுதிகளில் பணம் புழங்கப்பட்டால் எளிதில் மாட்டி விடுவோம் என்பதால் கிராமப் பகுதியில் கொடுத்தோம் இருந்தாலும் சிக்கிக் கொண்டோம் எனக் கூறியுள்ளனர்.