கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவில் காங்கிரஸின் செயற்குழு மாநாடு இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.  இதற்காக அப்பகுதியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் புகைப்படம் உள்ள பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களில் இந்திய வரைபடம் இடம் பெற்றுள்ளது. இந்த பேனர்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட பாஜக நிர்வாகி அமித் மால்வியா இந்தியாவின் சிதைந்த வரைபடத்தை பயன்படுத்துவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதில் அவர் கூறியதாவது, காங்கிரசின் செயற்குழு கூட்டம் பெலகாவில் நடைபெற உள்ள நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் இந்தியாவின் சிதைந்த வரைபடத்தை பயன்படுத்தி உள்ளார்கள். இதன் மூலம் காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு தவறாக கருத முடியாது இது அவர்களின் அறிக்கையாகும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவை விட, பாகிஸ்தானுக்கு தனது முழு விசுவாசத்தையும் செலுத்துவார்கள். காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய முஸ்லிம் லீக். இது இந்தியாவை பிளவுபடுத்தவே விரும்புகிறது.

இது தங்களது வாக்கு வங்கிகளை அதிகப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டுள்ளது. இது ஒரு அவமானமாகும் என தெரிவித்திருந்தார். இந்த பதிவிற்கு காங்கிரஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த பேனர்கள் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பேனர்கள் இல்லை. சில ஆதரவாளர்களால் வைக்கப்பட்டுள்ளது. சிறப்புமிக்க செயற்குழு கூட்டத்தை திசை திருப்பவே இவ்வாறு செய்யப்படுகிறது என பதில் அளித்துள்ளது.