தமிழக அரசியலில் மதுரை விமான நிலைய சம்பவம் தற்போது சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுக கட்சியின்  இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மதுரை விமான நிலையத்தில் அமமுக கட்சியின் பிரமுகர் ராஜேஸ்வரன் அவதூறாக பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் ராஜேஸ்வரன் மீது தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று ராஜேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி சிவகங்கை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு புறப்பட்டு வந்தார். அவரை ஒருவர் மிகவும் மோசமாக தரகுறைவாக பேசி உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த நபர் எவ்வளவு அசிங்கமாக பேச முடியுமோ அவ்வளவு அசிங்கமாக பேசினார். அந்த இடத்தில் எந்த மனிதராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார். ஆனால் மாண்புமிகு முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக அந்த நபரை கண்டு கொள்ளாமல் இருந்தார்.

இந்த சூழலில் தான் எடப்பாடியாரின் காவலர் அந்த நபரின் செல்போனை பிடுங்கி ஆப் செய்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தார். இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து கூச்சல் செய்ததால் நாங்கள் ஏதேனும் ஆயுதம் வைத்திருப்பாரோ என்று நினைத்து பயந்துவிட்டோம். நாங்கள் இது தொடர்பாக எங்கள் வழக்கறிஞருடன் ஆலோசனை செய்துள்ளோம். மேலும் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பிறகு நாங்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தோம் என்று கூறியுள்ளார்.