தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவர் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர்களின் சமகால நடிகர் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவருக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். நடிகர் சத்யராஜ் தற்போது கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து 38 வருடங்களுக்குப் பின் மீண்டும் நடித்து வருகிறார். நடிகர் சத்யராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் மற்றும் பெரியார் கொள்கை உடையவர். சமீபத்தில் இவரது மகள் திவ்யா தனது பெற்றோர்களைப் பற்றி உருக்கமாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, எங்களது அம்மாவின் உடல் நலக்குறைவால், அவர் கடந்த சில ஆண்டுகளாகவே கோமா நிலையில் இருந்து வந்தார். இதனால் எங்கள் வீட்டில் கடந்த சில ஆண்டுகள் மிகுந்த மோசமான காலகட்ட நிலையாகவே இருந்தது. எங்களது அம்மாவை கவனித்து வருவதற்காக வீட்டிலேயே அவசர சிகிச்சை பிரிவு போன்ற அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து அவரை கவனித்து வருகிறோம். நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த மன அழுத்த காலகட்டத்தை தற்போது கடந்து நான் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது எனது வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல ஒரு உறுதியை அது அமைத்துள்ளது.
தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பிரிவினருக்கு சத்தான உணவுகளை வழங்க வேண்டும் என்ற கனவை தற்போது நினைவாக்கியுள்ளேன். இதுவே என்னை துவண்டு விழாமல் முன்னோக்கிச் செல்ல வழி வகுக்கிறது. நான் இயல்பான நிலைக்கு மாறவும் இது எனக்கு உதவியுள்ளது. இருள் சூழ்ந்த சாலையில் ஒரு சிறிய ஒளியை என்னால் பார்க்க முடிகிறது அதை நோக்கி நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன். விரைவில் அந்த ஒளியை சென்றடைவேன். அப்பொழுது நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் அந்த செய்தியை பகிர்ந்து கொள்வேன் என தெரிவித்திருந்தார்.