தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் யூனிட் முஸ்லிம் லீக் பவள விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சிறுபான்மையினர் நலனுக்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று ஒரே மதம், ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே உணவு, ஒரே தேர்தல் மற்றும் ஒரே தேர்வு போன்றவற்றை கொண்டு வந்து ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்ற முயற்சி நடக்கிறது.

இப்படி செய்பவர்கள் சமூக நீதிக்கும் சகோதரத்துவத்துக்கும் எதிரானவர்கள். சம தர்மத்தை ஏற்காமல் இருக்கக்கூடியவர்கள். சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றினால் அதற்கு கூட ஒப்புதல் தர மாட்டார்கள். 4 மாதங்கள் ஆன பிறகு மாநில அரசுக்கு சட்டத்தை இயற்றுவதற்கு உரிமை கிடையாது என சொல்கிறார். இந்த சாதாரண சட்டத்தை கூட நிறைவேற்றுவதற்கு உரிமை இல்லாத மாநிலத்திற்கா அவர் ஆளுநராக இருக்கிறார். நீட் விலக்கு மசோதாவை கொண்டு வந்தால் பல மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார்.

பல்கலைக்கழகங்களின் வேந்தர் சட்டமும் முடக்கப்பட்டு கிடப்பில் இருக்கிறது. இதுதான் ஒரு ஆளுநர் செயல்படக்கூடிய லட்சணமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைச் சட்டம் போன்றவைகள் வேகமாக நிறைவேறும். நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை மக்களின் மருத்துவ கனவை தகர்த்து விட்டனர். ஹிந்தியை திணிப்பதோடு மாற்று மதத்தவர் மீது வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புகிறார்கள். ஆனால் சூதாட்டத்தாலும் நுழைவு தேர்வுகளாலும் உயிர்கள் பலியாவதை தடுக்க நாம் சட்டம் இயற்றினால் அதை மட்டும் தடுத்து விடுவார்கள் என்று கூறினார்.