தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2500 கோவில்களுக்கு ரூபாய் 50 கோடி நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் கடந்த ஒரு வருட காலத்தில் 640-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். இதில் அரசு நிகழ்ச்சிகள் 551. கழக நிகழ்ச்சிகள் 95-க்கும் மேற்பட்டவை. பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றை சேர்த்து மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் நான் கடந்த ஒரு வருடத்தில் 8,550 கிலோமீட்டருக்கு மேல் நான் சுற்றி வந்திருக்கிறேன்.

பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மூலம் 1 கோடியே 3 லட்சத்தை 74 ஆயிரத்து 355 வேர் பயனடைந்து இருக்கிறார்கள். இதை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் விரிவாக ஏற்கனவே கூறிவிட்டேன். அதன் பிறகு நான் அதிகமாக என் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் 32 நிகழ்ச்சிகளிலும், தொழில்துறையில் 30 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன்‌. இதற்கு அடுத்தபடியாக கேட்டால் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடத்தப்பட்ட 25 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.

இதைக் கேட்டவுடன் அமைச்சர் சேகர்பாபு இனி வாரவாராம் தேதி கேட்டு முதலிடத்திற்கு வந்து விடலாம் என்று நினைப்பார். அதுவும் எனக்கு நன்றாக தெரியும். அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். ஆனால் திராவிடம் என்ற சொல்லை பிடிக்காதவர்கள் எங்களை மதத்தின் விரோதிகளாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் பணிவோடு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரிகளை தவிர மதத்திற்கு அல்ல என்று கூறினார்.