ஆஸ்திரேலியா வீரர்கள் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், டேவிட் வார்னர் இந்தியாவுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு ஆஸ்திரேலியா தயாராக உள்ளது, தென்னாப்பிரிக்க மண்ணில் டி20 தொடரை 3-0 என கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 3-2 என இழந்தது. இதனைத்தொடர்ந்து ஒருநாள் உலகக் கோப்பை-2023க்கு முன் இந்திய அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி.  

இந்நிலையில், நேற்று ஆஸி., கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். மூத்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசக்னே, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ் மற்றும் பலர் இந்தியாவில் இறங்கினர். இதன்போது டேவிட் வார்னர்  ஒரு உணர்ச்சிகரமான குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

வார்னர் தனது இன்ஸ்டாவில், “எப்பொழுதும் இந்தியாவிற்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் எப்பொழுதும் நன்கு கவனிக்கப்படுகிறோம் மற்றும் நன்கு பாதுகாக்கப்படுகிறோம். மிக்க நன்றி. @gmraerocity எப்போதும் எங்கள் போக்குவரத்தை மிகவும் எளிதாக்குகிறது” என்று அவர் பாதுகாப்புப் பணியாளர்களுடன் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மறுபுறம், அலெக்ஸ் கேரி அவர்கள் ஹோட்டல் அறையில் தங்கியிருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் 106 மற்றும் 78 ரன்கள் எடுத்த 36 வயதான வார்னர், 3 போட்டிகளில் குறைந்தபட்சம் 20 ரன்கள் எடுக்கத் தவறினார். எனவே ஐசிசி நிகழ்வுக்கு முன்னதாக, இந்த மூத்த பேட்ஸ்மேன் டீம் இந்தியாவுக்கு எதிரான தொடரில் எப்படி செயல்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காயத்திலிருந்து மீண்ட நட்சத்திர வீரர்கள் :

இந்த இடது கை ஆட்டக்காரர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிட்செல் மார்ஷுடன் ஓபன் செய்ய வாய்ப்புள்ளது. இதனிடையே காயம் காரணமாக பல ஆண்டுகளாக அணியில் இருந்து விலகியிருந்த கேப்டன் பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவது ஆஸி.க்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

இப்போது செப்டம்பர் 22-27 முதல் டீம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே மொஹாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட்டில் 3 போட்டிகள் நடைபெறுகின்றன. அதேபோல் இரு அணிகளும் அக்டோபர் 8-ம் தேதி உலகக் கோப்பை பயணத்தை தொடங்கும்..

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி :

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுச்சென், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட்  ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.