
சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் இளவரசு(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு வந்த 3 பேர் போதையில், உணவு சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து இளவரசு சாப்பிட்டதற்கு பணம் கேட்டபோது, கொடுக்க மறுத்து அவர்கள், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அங்கிருந்த பொருட்களை எல்லாம் அடித்து உதைத்ததோடு, இளவரசை கத்தியால் குத்தினர். மேலும் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த இளவரசை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நபர்கள் யார் என்பதை குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அவர்கள் சசிகுமார்(23), மணிகண்டன் (25), முத்து (30) ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் செம்பரம்பாக்கம் சுடுகாடு பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் மூவரும் தப்பி ஓட முயற்சி செய்ததால், அவர்களது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.