நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எனும் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் அந்நிறுவனம் படங்களை தயாரித்து வருகிறது. கமல் நடிக்கும் படங்களை மட்டுமே அதிகமாக தயாரித்து வந்த அந்நிறுவனமானது, அவ்வப்போது மற்ற நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களையும் தயாரித்துள்ளது. சுமார் 40 வருடங்களில் 4 திரைப்படங்கள் தான் மற்ற நடிகர்களின் படங்கள் ஆகும்.

ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. சிவகார்த்திகேயன் நடிக்க ராஜ் குமார் பெரியசாமி டைரக்டு செய்யும் ஒரு திரைப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. அப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து சிம்பு நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்க போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு இன்னும் சில இளம் நடிகர்களிடமும் பேசி வருகிறார்களாம். அது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.