இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு கேரளாவில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார். அங்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் பகவதி அம்மன் கோவில் போன்றவைகளுக்கு சென்று சுற்றி பார்த்தார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் போன்ற இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ட்ரோன் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குமரியில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி பார்த்த ஜனாதிபதி முர்மு அங்கிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். அதில் இங்கு வந்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. ஆன்மீகத்தின் சின்னமாக விளங்கும் இந்த நினைவு மண்டபத்தை கட்டுவதற்கு பின்னால் இருந்த மறைந்த ஏக் நாத் ராஜ்டே ஜியின் மகத்துவத்தை கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் குமரியில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பிறகு ஜனாதிபதி லட்சத்தீவுக்கு செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.