இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் கிசான் சம்மன் நிதி, கிசான் சம்ரிதி கேந்திராக்கள், கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதி வாயிலாக ரூ.2000 என 3 தவணைகளாக வருடந்தோறும் மொத்தமாக ரூ.6000 வழங்கப்படுகிறது. இதையடுத்து நாட்டில் உள்ள பல விவசாயிகளின் முதுமைக்கால பிரச்சனைகளை தீர்க்கும் அடிப்படையில் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா (PMKMY) திட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு உதவுகிறது.

சிறு-குறு விவசாயிகளுக்கு (எஸ்எம்எஃப்) சமூகபாதுகாப்பு மற்றும் முதியோர் பாதுகாப்பு வழங்குவதற்காக அரசு இத்திட்டத்தை துவங்கியுள்ளது. மத்திய அரசு வழங்கும் இத்திட்டத்தில் அனைத்து சிறு-குறு விவசாயிகள், 2 ஹெக்டேர் வரை பயிரிடக்கூடிய நிலம் வைத்திருக்கும் மற்றும் 18 முதல் 40 வரை உள்ளவர்கள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் நிலப்பதிவேடுகளில் தங்களது பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து பயன்பெறலாம்.

இதில் 60 வயது (அ) அதற்கு மேற்பட்ட வயதுடைய விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஓய்வூதியமாக ரூபாய்.3000 வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி இறந்து விட்டால் அவரின் மனைவிக்கு ஓய்வூதியத்தில் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். 18 -40 வயதிற்குட்பட்ட பதிவுதாரர்கள் ரூபாய்.55 முதல் ரூ. 200 வரையிலான மாதாந்திர பங்களிப்புகளை செய்ய வேண்டும். இத்திட்டத்தில் சேரும் நபர்கள் 60 வயதை அடைந்ததும் அவர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம். இதை செய்த பின் அவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு ஓய்வூதியத் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும்.