திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் மூலம் கோவிலுக்கு செல்கின்றனர். இதில் மின் இழுவை ரயில் சேவை சாதாரணமாக அதிகாலை 5.30 மணியிலிருந்தும், விசேஷ நாட்களில் அதிகாலை 3.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை செயல்படும். இதனை முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.

நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகேசன்(77) என்பவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அவர்கள் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று இரவு ராக்கால பூஜையில் சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து இரவு 9:30 மணிக்கு முருகேசன் குடும்பத்தினர் மின் இழுவை ரயில் நிலையத்திற்கு சென்று அடிவாரம் செல்வதற்கு டிக்கெட் கேட்டுள்ளனர்.

ஆனால் மின் இழுவை சேவை நேரம் முடிந்து விட்டதால் டிக்கெட் கொடுக்கப்படவில்லை. இதனால் முருகேசனும் அவரது குடும்பத்தினரும் படிப்பாதை வழியாக கீழே இறங்கி உள்ளனர். வயது முதிர்வு காரணமாக கால் வலி ஏற்பட்டதால் முருகேசன் கைகளை ஊன்றியபடி படியில் தவழ்ந்து இறங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த கோவில் காவலாளிகள் சிலர் அவரை நாற்காலியில் வைத்து தூக்கிக் கொண்டு அடிவாரம் சென்றுள்ளனர்.

இதுகுறித்து முருகேசன் குடும்பத்தினர் கூறியதாவது, அடிவாரம் செல்வதற்கு டிக்கெட் கேட்டபோது சர்வர் காரணமாக டிக்கெட் கொடுக்க முடியவில்லை என பணியாளர்கள் தெரிவித்தனர். இரண்டு முதியவர்களுக்கு மட்டுமாவது டிக்கெட் தாருங்கள் என கேட்டோம். ஆனால் அவர்கள் டிக்கெட் தரவில்லை.

இதனால் படிப்பாதை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். அப்போது சில பணியாளர்கள் விரைவாக செல்லுங்கள் மின்விளக்குகளை அணைக்கப் போகிறோம் என தெரிவித்தனர். இதற்கிடையே முருகேசனுக்கு கால் வலி வந்ததால் அவர் கைகளை ஊன்றியபடி படியில் தவழ்ந்து வந்தார். பின்னர் காவலாளிகள் உதவியுடன் அவரை கீழே கொண்டு வந்தோம்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகளுடன் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பக்தர்களிடம் அலட்சியம் காட்டக்கூடாது என முருகேசனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முருகேசன் படிப்பாதையில் கையால் ஊன்றி தவழ்ந்து வந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.