சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்து, பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அரசு தயார் நிலையில் உள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, 5 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்யும் என்பதால், அவ்விடங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மக்களுக்கு அரசின் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், நகரின் தாழ்வான பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் வீடு-வீடாக சென்று உணவுகளை வழங்குகின்றனர்.

நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற தாழ்வான பகுதிகளில், வெள்ளம் நுழைய வாய்ப்புள்ளதால், மக்கள் தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக பாலங்களில் நிறுத்தி வந்தனர். இந்த நிலையில் இரு சக்கர வாகன ஓட்டி சைலென்சரில் இருக்கும் நீரை வெளியேற்ற வாகத்தை செங்குத்தாக நிறுத்தினார். இதனை பார்த்த போலீஸ் அதிகாரி அவரை கலாய்த்து சென்றார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது.