தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. விஏஓ கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரூரல் டிஎஸ்பி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. படுகொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை எம்.பி கனிமொழி உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரிடம் நேரில் சென்று வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி எம்பி, நேர்மையான அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மேலும் தூத்துக்குடி அருகே உள்ள முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளையை தடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.