கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா தனது அணு ஆயுதங்களால் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை தொடர்ந்து மிரட்டி வருகின்றது. இதனால் தென்கொரியா மற்றும் ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா வடகொரியாக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் வடகொரியா தனது அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பதமாக வடகொரியா தனது அணு ஆயுதங்களை விரிவுபடுத்திக் கொண்டே செல்கின்றது.

இந்த பிரச்சனை ஒரு புறத்தில் இருக்க அமெரிக்காவும் தென்கொரியாகவும் கொரிய தீபகற்பத்தில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போவதாக கடந்த வாரம் அறிவித்துள்ளது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு “போர் பயிற்சியை இரு நாடுகளும் தொடர்ந்தால் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என எச்சரித்தது. அதேபோல் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே வடகொரியா ஐ.சி.பி.எம் என்று அழைக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்த பதற்றம் தணிவதற்குள் வடகொரியா அடுத்த நாளே சுக்கான் பகுதியில் இருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி நேற்று காலை 7.00 மணி முதல் 7.11 மணிக்குள் குறுகிய தொலைவு செல்லக்கூடிய 2 ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்தது. இந்த ஏவுகணை சோதனைக்கு தென்கொரிய நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு வடகொரியாவை சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் மற்றும் 4 தனி நபர்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் ஐ.நாவின் பொதுச்செயலாளரான ஆண்டனியோ குட்டரெஸ் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.