துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. இதுவரையில் இரு நாடுகளிலும் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 48000 கடந்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் நேற்றோடு முடிவடைந்து உள்ளது.

இந்த நிலையில் அந்நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள ஹடாய் மாகாணத்தில் இரண்டு புதிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 213 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் நேற்று இரவு 8.04 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் 6.4 என்ற ரிக்டர் அளவு கோலில் 16.7 km ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. அதேபோல் இரண்டாவது நிலநடுக்கம் 7 கிலோமீட்டர் ஆழத்தில் 5.8 என்ற ரிக்டர் அளவுகோலில் உணரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சேதமடைந்து இருக்கும் கட்டிடங்களில் இருந்து சற்று தூரம் விலகியே இருக்கும்படியும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கத்தினால் துருக்கி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.