ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய நிலையில், முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்திருந்தது.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். ஆஸ்திரேலியா அணி 479/9 என்ற வலுவான நிலையில் இருக்கிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜா 423 பந்துகளில் 180 ரன்கள் எடுத்து அவுட் ஆகியுள்ளார். அக்சர் படேல் பந்தில் 180 ரன்கள் எடுத்திருந்தபோது உஸ்மான் கவஜா LbW ஆகி வெளியேறினார். இதனால் தற்போது ஆஸ்திரேலியா அணியின் ரன்கள் வேட்டை  தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக பந்துகளை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை உஸ்மான் கவாஜா பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 1979-ம் ஆண்டு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கிரஹாம் ஒரே இன்னிங்ஸில் 392 பந்துகள் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.