விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிஎஸ்சி ஆங்கில பள்ளியில் பரிக்ஷா பே சார்ச்சா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாடினார். இந்த நிகழ்ச்சியை மத்திய விமானத்துறை அமைச்சர் வி.கே சிங் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மத்திய மந்திரி வி.கே சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி மாணவர்கள் இடையே உரையாற்றினார். மாணவர்கள் மத்தியில் தேர்வு பயத்தை நீக்கி மன தைரியத்துடன் தேர்வை எதிர்கொள்ள செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.

டெல்லி மற்றும் மும்பை இடையேயான எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரும். கடந்த 8 வருடங்களாக தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமான அளவில் இருக்கும் வகையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் அமையும் என்று கூறினார். மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை தமிழக அரசு தான் தேர்வு செய்துள்ளது என்றும் அதற்கான பணிகள் அனைத்தையும் தமிழக அரசுதான் செய்து வருகிறது என்றும் கூறினார். அதோடு இந்த திட்டம் முடிக்கப்பட்டால் தமிழகத்திற்கு இரண்டாவது பெரிய விமான நிலையம் அமையும் என்றும் கூறினார்.