நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் விமானத்தில் போக ஏதுவாக மத்திய அரசு கொண்டுவந்த UDAN திட்டத்தின் கீழ், இந்தியாவிற்குள் சிறிய நகரங்களை இணைக்க விமான சேவை துவங்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டிலும் புது இடங்களுக்கு விமான சேவை தொடங்கப்படவுள்ளது. இதற்கென சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகமானது (DGCA) ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. இதன் காரணமாக இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஆகாசா ஏர் ஆகிய நிறுவனங்கள் உலகின் புது நகரங்களுக்கு விமான சேவைகளை துவங்க முடியும். இதனால் விமான பயணிகளுக்கு நேரடியாக பலன் கிடைக்கும்.

சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் DGCA ஜூன் 12 ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில், இந்திய நிறுவனங்கள் புது சர்வதேச இடங்களுக்கு விமான சேவைகளை துவங்குவதற்கான விதிகளில் பெரும் தளர்வு அளிக்கப்படும் என கூறியுள்ளது. அப்படி விதிகள் தளர்த்தப்படுவதால் உள்நாட்டு விமான நிறுவனங்கள், வெளிநாட்டு நகரங்களுக்கான சேவையை துவங்குவது மிகவும் எளிதாக இருக்கும். இதனிடையே இந்திய நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தர நிலைகள் தளர்த்தப்பட்டுள்ளது.

தற்போது தர நிலைகளில் 33 புள்ளிகள் என்ற நிலைக்கு பதில் அவர்களின் தரநிலை 10 புள்ளிகளில் மட்டும் தீர்மானிக்கப்படும். இதன் பொருள் இந்திய விமான நிறுவனங்கள் 33-க்கு பதில் 10 தர நிலைகளை மட்டுமே பூர்த்தி செய்தாலே, புதிய சர்வதேச இடங்களுக்கு விமான சேவைகளை தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். டிஜிசிஏ தன் அறிவிப்பில், இந்திய விமான நிறுவனங்கள் வெளிநாட்டு நகரங்களுக்கான விமான சேவைகளை அதிகரித்து வரும் நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.