
ஐக்கிய அரபு அமீரகம் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது..நியூசிலாந்து ஒரு அசோசியேட் அணியிடம் அணியிடம் தோற்றது அவர்களின் வரலாற்றில் இதுவே முதல் முறை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக நியூசிலாந்தை தோற்கடித்தது. துபாயில் சனிக்கிழமை நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்களை பெற்ற நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அசால்ட்டாக வெற்றியை எட்டியது. 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை கட்டுப்படுத்திய அயன் அப்சல் கான் ஆட்ட நாயகனாகத்தேர்வு செய்யப்பட்டார். நியூசிலாந்து ஒரு அசோசியேட் அணியிடம் அணியிடம் தோற்றது அவர்களின் வரலாற்றில் இதுவே முதல் முறை.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்தினர்.. 38 ரன்களை எட்டிய நேரத்தில் 4 நியூசிலாந்து வீரர்கள் பெவிலியன் திரும்பினர். 5வது இடத்தில் களமிறங்கிய மார்க் சாப்மேனால் மட்டுமே நியூசிலாந்து பேட்டிங்கில் பிரகாசிக்க முடிந்தது. சாப்மேன் 46 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 63 ரன்கள் எடுத்தார். சாப்மேனைத் தவிர, தலா 21 ரன்கள் எடுத்த போவ்ஸ் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரால் மட்டுமே நியூசிலாந்து பேட்டிங்கில் இரட்டை இலக்கங்களைக் கடக்க முடிந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அயன் கான் அவர்களின் ஹீரோ. மேலும் ஜவதுல்லா 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜொலித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ரன் ஏதும் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. ஆனாலும் யுஏஇ அணி தொடக்க வீரர்களான கேப்டன் முகமது வாசிம் மற்றும் விருத்யா அரவிந்த் ஆகியோர் கைகோர்த்து சிறப்பாக ஆடினர். விருத்யா 21 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் எடுத்தார். ஆனால் இதன்பின் வந்த ஆசிப் கானுடன் இணைந்து பேட்டிங் பட்டாசுகளை வாசிம் தொடர்ந்தார்.
வாசிம் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் குவித்து, அவர் ஆட்டமிழந்தபோது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியில் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. அதன்பிறகு ஆசிப் கான், பசில் ஹமீது ஜோடி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆசிப் கான் 29 பந்துகளில் 48 ரன்களும், பசில் ஹமீத் 12 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னதாக, தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது, இதன் மூலம் 3வது போட்டி இறுதிப் போட்டி ஆனது. இந்தப் போட்டி ஞாயிற்றுக் கிழமையான இன்று நடைபெறவுள்ளது. இந்த வெற்றியை யுஏஇ ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் அசோசியேட் அணி நியூசிலாந்தை தோற்கடிப்பது இதுவே முதல் முறையாகும். இப்போது ஐசிசியின் அனைத்து 12 பெரிய அணிகளும் ஒரு அசோசியேட் நாட்டிற்கு எதிராக ஒரு முறையாவது தோல்வியடைந்துள்ளனர். நியூசிலாந்து மட்டுமே அசோசியேட் அணியிடம் தோல்வியடையாமல் இருந்தது. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பெரிய அணியை தோற்கடித்துள்ளது. இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளை மட்டுமே அவர்கள் தோற்கடித்துள்ளனர்.
WHAT A WIN! 🔥
UAE beat New Zealand by seven wickets to level the series in stunning fashion 🙌#UAEvNZ 📝: https://t.co/IFbq94Tfhb pic.twitter.com/yId7QP86b6
— ICC (@ICC) August 19, 2023
Congratulations to the UAE. What a performance against New Zealand tonight. This moment ❤️ #UAEvNZ pic.twitter.com/oIUJaVRFqI
— Farid Khan (@_FaridKhan) August 19, 2023