
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு வாழ்த்து செய்தியும் அதோடு விமர்சன செய்தியையும் வீடியோவாக வெளியிட்டார். அதாவது நாம் அனைவரும் சேர்ந்து திமுகவுக்கு வாக்களித்த நிலையில் அவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். தமிழகத்தில் இன்று பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது. எனவே அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர்களை மாற்ற வேண்டும் என்றார். அவர் திமுகவை இதுவரை மறைமுகமாக விமர்சித்த நிலையில் இன்று நேரடியாகவே திமுகவின் பெயரை சொல்லி அவர்களுக்கு வாக்களிக்க கூடாது என்றார்.
இதற்கு தற்போது அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, நாங்கள் அதைப் பற்றி கருத்து சொல்லவில்லை. அவரை நாங்கள் ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் நீங்கள் அதைப் பற்றி திரும்பத் திரும்ப கேட்கிறீர்கள். நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மை மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. தங்களுடன் தோழமையாக இருப்பது யார் நீலி கண்ணீர் வடிப்பது யார் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். மேலும் எப்போதும் தமிழக வெற்றி கழகத்தை அரசியல் கட்சியாக பார்க்கவில்லை நாங்கள் அரசியல் கட்சிகளுடன் மட்டுமே மோதிப் பழக்கப்பட்டவர்கள் என்றார்.
மேலும் நேற்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜயும் கலந்து கொண்ட நிலையில் தற்போது சிறுபான்மை மக்களை யாரும் ஏமாற்ற முடியாது அவர்களுடன் தோழமையாக இருப்பது யார் நீலிக்கண்ணீர் வடிப்பது யார் என்று அவர்களுக்கு தெரியும் என்று அதனை விமர்சிக்கும் விதமாக ரகுபதி கூறியுள்ளார்.