திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி நிலையங்களில் அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பணிக்காக மாவட்டம் முழுவதிலும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராமபதி. இவர் ஒரு அங்கன்வாடி அமைப்பாளர். மற்றும் ஜோலார்பேட்டை கோடியுரை சேர்ந்த ஜம்ஷிகா ஆகியோர் அப்பகுதிகளில் விண்ணப்பித்துள்ள பெண்களின் முகவரிகளை அதிகாரிகள் உதவியுடன் கேட்டு அறிந்து கொண்டு, அவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற முயற்சித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆலங்காயம் பகுதியை சேர்ந்த அப்துல் சாஹித் என்பவரிடம் ராமவதி மற்றும் ஜம்ஷிகா இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 50,000 முன்பணம் கேட்டுள்ளனர். அதனை பெறுவதற்காக இருவருமே அப்துல் சாஹித் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு அப்துல் சாஹித் மற்றும் அவரது உறவினர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் இருவரும் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.